மாவட்ட செய்திகள்

அரக்கோணம் பகுதியில் கைத்தறி நெசவு தொழிலுக்கு பாவு, நூல் கிடைக்கவில்லை + "||" + The linen weaving industry in Arakkonam area is not available

அரக்கோணம் பகுதியில் கைத்தறி நெசவு தொழிலுக்கு பாவு, நூல் கிடைக்கவில்லை

அரக்கோணம் பகுதியில் கைத்தறி நெசவு தொழிலுக்கு பாவு, நூல் கிடைக்கவில்லை
கொரோனா ஊரடங்கால் கைத்தறி நெசவு தொழிலுக்கு பாவு மற்றும் நூல் கிடைக்கவில்லை. ஏற்கனவே உற்பத்தி செய்து வைக்கப்பட்டு உள்ள சேலை, லுங்கி தேக்கமடைந்து உள்ளதால் உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
அரக்கோணம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான தொழிற்சாலைகளும் செயல்படாமல் முடங்கி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி தாலுகாவிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி, விசைத்தறி தொழில் இருந்து வருகிறது. அரக்கோணம் அருகே குருவராஜபேட்டை, மின்னல், நரசிங்கபுரம், வளர்புரம், சேந்தமங்கலம், சம்பத்துராயன்பேட்டை, நாகவேடு, நெமிலி, அசநெல்லிகுப்பம், திருமால்பூர், சிறுணமல்லி, பனப்பாக்கம், மேலபுலம்புதூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்த தொழிலை குடிசை தொழிலாக செய்து வருகின்றனர்.


மேலும் அரக்கோணத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வந்தன. கைத்தறி நெசவாளர்கள் இந்த தொழிலை குடிசை தொழிலாகவும், தினக்கூலி அடிப்படையிலும் செய்து வந்தனர். இந்த தொழிலுக்கு தேவையான பாவு, நூல் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. அவற்றை கிராம பகுதிகளில் உள்ள நெசவாளர்களிடம் தினக்கூலி அடிப்படையில் கொடுத்து சேலை, லுங்கி, கைக்குட்டை ஆகியவற்றை உற்பத்தி செய்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வந்தனர். கூலி தொழிலாளர்கள் சிலர் சொந்தமாகவே பாவு, நூல் ஆகியவற்றை கொள்முதல் செய்து சேலை, லுங்கி ஆகியவற்றை உற்பத்தி செய்து சிறு வியாபாரமாகவும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால் நெசவு தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து வர வேண்டிய பாவு, நூல்களை கொள்முதல் செய்ய முடியாததால் கிராம பகுதிகளில் உள்ள கூலி நெசவு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தினசரி வருமானத்திற்கு வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த சேலை, லுங்கி, கைக்குட்டை ஆகியவற்றை விற்பனை செய்ய முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக சேலை, லுங்கி, கைக்குட்டை ஆகியவை தொழிற்கூடங்களில் தேக்கமடைந்து உள்ளது.

வருமானம் இழப்பு

இது குறித்து கூலி நெசவாளர்கள் கூறியதாவது:-

ஊரடங்கிற்கு முன்பாக எங்களுக்கு தினமும் வேலை இருந்து கொண்டே இருக்கும். சேலை, லுங்கி ஆகியவற்றை மாற்றி, மாற்றி உற்பத்தி செய்து வந்தோம். பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்து வழங்கி வருமானம் பெற்று வந்தோம்.

கைத்தறி நெசவு மூலமாக தினமும் 6 முதல் 8 லுங்கிகளையும், சேலை என்றால் தினமும் 4 சேலைகள் வரையும் உற்பத்தி செய்து விடுவோம். அதேபோல் விசைத்தறி மூலமாக தினமும் 20 லுங்கி வரை உற்பத்தி செய்து வந்தோம். தினமும் 300 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை சம்பாதித்து வந்தோம். தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதால் எங்கள் நெசவு தொழிலுக்கு தேவையான பாவு, நூல் போன்ற மூலப்பொருட்கள் கிடைக்காததால் எங்களின் வேலை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி செய்த லுங்கி, சேலைகளும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதன் காரணமாக தினமும் வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

நிவாரணம்

உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. ஆகவே தமிழக அரசு கூலி நெசவு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு நெசவாளர்களுக்கு பாவு, நூல் உள்ளிட்ட மூலபொருட்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராம பகுதிகளில் உள்ள நெசவு தொழிற்சாலைகள் தடையில்லாமல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட கூலி நெசவு தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா ஊரடங்கால் கவலையில் ஆழ்ந்துள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள்
கொரோனா ஊரடங்கால் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலையிழந்து கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.
2. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரைப்பாய்கள் தேக்கம் உணவுக்கு வழியில்லாமல் தொழிலாளர்கள் திண்டாட்டம்
அகரம்சேரி பகுதியில் ஊரடங்கால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கோரைப்பாய்கள் தேங்கி கிடக்கிறது. பாய் தயாரிக்கும் தொழிலாளர்கள் உணவுக்கு வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
3. சேதுபாவாசத்திரம் பகுதியில் கனமழை: 3-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சேதுபாவாசத்திரம் பகுதியில் கனமழை காரணமாக 3-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.