சென்னையில் இருந்து வந்தவர்கள்: தூத்துக்குடியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா - நெல்லை-தென்காசியில் 2 பேர் பாதிப்பு
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், நெல்லை, தென்காசியில் 2 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்தில் ஏற்கனவே 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 26 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
ஒரு மூதாட்டி மட்டும் இறந்து உள்ளார். பசுவந்தனையை சேர்ந்த பெண் கடைசியாக கடந்த மாதம் 18-ந் தேதி பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய தொற்று இல்லாமல் இருந்தது. கடந்த 18 நாட்களாக புதிய தொற்று இல்லாததால், இன்னும் 3 நாட்களில் தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறிவிடும் என்று அதிகாரிகளும், பொதுமக்களும் ஆவலோடு காத்து இருந்தனர்.
அதே நேரத்தில் புதிய தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
கொரோனா உறுதி
இந்த நிலையில் சென்னையில் இருந்து எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூருக்கு வந்த ஒரு பெண்ணுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதே போன்று ஆழ்வார்திநகரி அருகே உள்ள மளவராயநத்தத்தை சேர்ந்த ஒரு லாரி டிரைவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவரும் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பி இருப்பது தெரியவந்து உள்ளது.
29 ஆக உயர்வு
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கொரோனா பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று ஒரு பெண் போலீசும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். தொடர்ந்து அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நெல்லை-தென்காசி
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 63 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 5 பேரை தவிர மற்றவர்கள் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினர். கடந்த 25-ந்தேதிக்கு பிறகு புதிதாக கொரோனா தொற்றும் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். நேற்று அந்த கர்ப்பிணியின் தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நேற்று முன்தினம் வரை நோய் தொற்றால் 47 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில், ஒருவருக்கு நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் புளியங்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 51 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஏற்கனவே 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மற்ற 39 பேரும் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story