ஆழ்வார்திருநகரி அருகே, பெட்ரோல் பங்க் அதிபரை கயிற்றால் கட்டிப்போட்டு கொள்ளையடித்த 4 பேர் கைது - 20 பவுன் நகைகள் மீட்பு
ஆழ்வார்திருநகரி அருகே பெட்ரோல் பங்க் அதிபரை கயிற்றால் கட்டிப்போட்டு கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 20 பவுன் நகைகளை மீட்டனர்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே பால்குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 70). தொழில் அதிபரான இவர் பால்குளம் விலக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இறந்து விட்டார். இவருடைய 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் பாலசுப்பிரமணியம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அதிகாலையில் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென்று பாலசுப்பிரமணியத்தை தாக்கி, அவரை கயிற்றால் கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களை பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் சென்று கொள்ளையர்களை வலைவீசி தேடினர்.
4 பேர் கைது
இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக, ஆழ்வார்திருநகரி அருகே காடுவெட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜ் (30), சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தை சேர்ந்த ஞானக்கண் பொன்ராஜ் மகன் நிக்சன் (26), விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து மகன் ரஞ்சித்குமார் (27), தேனி மாவட்டம் தெங்குவார்பட்டியைச் சேர்ந்த பிச்சை காளை மகன் சிரஞ்சீவி (25) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.34 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான ராஜ், பாலசுப்பிரமணியத்தின் பெட்ரோல் பங்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஊழியராக வேலை செய்தார். அப்போது ராஜின் செயல்பாடுகள் பிடிக்காததால், அவரை வேலையில் இருந்து பாலசுப்பிரமணியம் நிறுத்தி விட்டார். இந்த நிலையில் ராஜ் தன்னுடைய நண்பரான நிக்சன் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story