2 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: கிருஷ்ணகிரியில் பாதிப்பு 4-ஆக உயர்வு


2 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: கிருஷ்ணகிரியில் பாதிப்பு 4-ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 May 2020 11:30 PM GMT (Updated: 2020-05-07T01:44:01+05:30)

மும்பையில் இருந்து ஓசூர் வந்த 2 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

மத்திகிரி, 

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த 34 வயது ஆண் ஒருவரும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், மராட்டிய மாநிலம் மும்பையில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர், மும்பையில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வாங்கினார். காரில் புறப்பட்ட அவருடன் கொளத்தூரை சேர்ந்தவரும், சண்டிகரை சேர்ந்த 26 வயது வாலிபரும் உடன் வந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழக எல்லையான ஓசூரை அடைந்த 3 பேரும் மிகவும் சோர்வடைந்தனர். அதனால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர், ஓசூர் மத்திகிரி டைட்டன் டவுன் சிப் பகுதியில் உள்ள உறவினரை தொடர்பு கொண்டார். அவரும், மத்திகிரி அருகே தனியார் லே-அவுட்டில் உள்ள தனது வீட்டில் தங்கி கொள்ள அனுமதித்துள்ளார். இதனால் 3 பேரும் அங்கு தங்கினர். மும்பையில் இருந்து 3 பேர் வந்து தங்கி இருப்பதை அறிந்த மாவட்ட நிர்வாகம், அவர்களை வீட்டில் தனித்தனி அறையில் தனிமைப்படுத்தியது.

இவர்கள் 3 பேருக்கும் தனித்தனியாக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக, ஓசூர் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. சண்டிகரை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை. கொரோனா தொற்று உள்ள 2 பேரையும் அதே வீட்டில் தனித்தனி அறையில் மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

மேலும் தனியார் லே-அவுட் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதை சுற்றியுள்ள, 7 கிலோமீட்டர் தூரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. வீடு, வீடாக சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் கணக்கெடுப்பு பணியை தொடங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நேற்று முன்தினம் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று ஓசூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

Next Story