தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தடுப்புகள் அமைப்பு


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தடுப்புகள் அமைப்பு
x
தினத்தந்தி 7 May 2020 5:00 AM IST (Updated: 7 May 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 65 மதுக்கடைகள் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் மூடப்பட்டன. இந்த மதுக்கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபம், தடங்கத்தில் உள்ள டாஸ்மாக் கிடங்கு, அரூரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஆகியவற்றிக்கு கொண்டு வரப்பட்டன. இந்த இடங்களில் ரூ.15 கோடி மதிப்பிலான 35 ஆயிரம் பெட்டி மதுபாட்டில்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்காரணமாக தர்மபுரி, அரூர், தடங்கம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த மதுப்பெட்டிகளை சம்பந்தப்பட்ட மதுக்கடைகளுக்கு அனுப்பும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் தலைமையில் துறை சார்ந்த அலு வலர்கள் இந்த பணியை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் தர்மபுரி நகரில் உள்ள 9 மதுக் கடைகள் மற்றும் தர்மபுரி- திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் சிக்களூர் கிராமத்தில் உள்ள ஒரு மதுக்கடை என மொத்தம் 10 மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு தடைவிதித்து கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டு உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் இந்த 10 கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாளர் கேசவன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட 10 மதுக்கடைகளை தவிர மற்ற 55 மதுக்கடைகளில் இன்று முதல் மதுவிற்பனை செய்யப்படும். மதுபானங்கள் வாங்க வருவோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு கடையிலும் மதுபானங்கள் வாங்க வருவோரின் வசதிக்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபானம் வாங்க வரும் ஒவ்வொருவரின் கையிலும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு முககவசம், கையுறைகள், கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

கிருஷ்ணகிரி

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதனால் மதுக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும் மதுக்கடைகளுக்கு மதுபானங்கள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தொழிலாளர்கள் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. இதனால் மதுக்கடைகளில் மதுபானம் வாங்க வருவோர் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தனித்தனியாக குடையை பிடித்துக்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி வந்தால் மட்டுமே கடையில் மதுபானம் விற்பனை செய்யப்படும். மேலும் குடை இல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வரும் மதுப்பிரியர்களுக்கு மதுபானங்கள் வாங்க அனுமதிக்க இயலாது என்று தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தெரிவித்தார்.

Next Story