வேப்பூர் அருகே மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கண்டக்டர் அடித்து கொலை தந்தை- மகன் கைது


வேப்பூர் அருகே மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கண்டக்டர் அடித்து கொலை தந்தை- மகன் கைது
x
தினத்தந்தி 7 May 2020 3:34 AM IST (Updated: 7 May 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கண்டக்டரை அடித்து கொலை செய்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர்,

வேப்பூர் கூட்டுரோடு அருகே வேப்பூர்-சேலம் சாலையோரம் கடந்த 28-ந்தேதி காலை 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலுக்கு அருகில் மொபட் ஒன்று கிடந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் இறந்தவர் விருத்தாசலம் அருகே உள்ள ஊ.கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கண்டக்டர் ரவிச்சந்திரன்(வயது 48) என்பதும், அவரை அதே பகுதியை சேர்ந்த பூசாரி சத்தியநாராயணன் என்பவர், தனது 17 வயது மகனுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடனுக்கு வெங்காயம்

விருத்தாசலம் அருகே உள்ள ஊ.கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். விருத்தாசலம் முல்லை நகரில் தனது 2-வது மனைவியுடன் வசித்து வந்த இவர் வீட்டின் அருகில் மனைவிக்கு காய்கறி கடை வைத்து கொடுத்துள்ளார்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் என்கிற சத்தியநாராயணன். பூசாரியான இவர், ஊர் ஊராக சென்று குறி சொல்வதோடு, வெங்காய வியாபாரமும் செய்து வந்துள்ளார். இதனால் ரவிச்சந்திரனுக்கும், சத்தியநாராயணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரவிச்சந்திரனிடம் சத்தியநாராயணன், அடிக்கடி கடனுக்கு வெங்காயத்தை வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வியாபாரம் குறைந்தது. இதனால் வெங்காயம் வாங்கிய பாக்கி தொகை ரூ.23 ஆயிரத்தை ரவிச்சந்திரனிடம் சத்தியநாராயணன் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் ரவிச்சந்திரன் கேட்டும் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

வாக்குவாதம்

இதற்கிடையே கடந்த 28-ந்தேதி ரவிச்சந்திரன், சத்தியநாராயணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் வேப்பூர் அருகே கீரம்பூர் கிராமத்தில் உள்ள வராகி கோவிலுக்கு வந்து பணத்தை வாங்கி செல்லும்படி சத்தியநாராயணன் கூறியுள்ளார்.

இதையடுத்து ரவிச்சந்திரன் தனது மொபட்டில் கீரம்பூர் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதில் ரவிசந்திரன், சத்தியநாராயணனை அருகில் கிடந்த கட்டையால் தாக்கியுள்ளார்.

இதைபார்த்த சத்தியநாராயணனின் 17 வயது மகன் அருகில் கிடந்த கைபம்பின் கைப்பிடியை எடுத்து ரவிச்சந்திர னின் தலையில் அடித்துள்ளார். மேலும் சத்தியநாராயணனும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

தந்தை-மகன் கைது

இறந்த ரவிச்சந்திரனின் தலையில் இருந்து அதிக அளவு ரத்தம் கொட்டியதால் அதை மறைக்க சத்தியநாராயணனும் அவரது மகனும் புடவையால் சுற்றி பின்னர் தார்பாயால் மூடியுள்ளனர். பின்னர் அவரது உடலையும், மொபட்டையும், சத்தியநாராயணனின் வாகனத்தில் ஏற்றிகொண்டு சென்று வேப்பூர் கூட்டு ரோடு அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா, வள்ளூர் காளி கோவிலில் பதுங்கி இருந்த சத்தியநாராயணன், அவரது மகனை போலீசார் கைது செய்து வேப்பூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story