கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் மேலும் 39 பேர் அனுமதி புதிதாக யாருக்கும் தொற்று இல்லை


கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் மேலும் 39 பேர் அனுமதி புதிதாக யாருக்கும் தொற்று இல்லை
x
தினத்தந்தி 7 May 2020 7:54 AM IST (Updated: 7 May 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் கோவை ஆஸ்பத்திரிகளில் மேலும் 39 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நேற்று யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.

கோவை,

கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் உள்பட சிலர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வந்தனர். அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தொற்று உறுதியான 146 பேரில் 141 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். ஒருவர் இறந்து விட்டார். தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சந்தேகத்துடன் 39 பேர் அனுமதி

இதற்கிடையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று 39 பேர் கொரோனா தொற்று சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 26 பேர், சிறுவன்-1, பெண்கள்-12 பேர் ஆவார்கள்.

இதில் 24 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 15 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சுகாதாரத்துறையினர் விசாரணை

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன. அதில் உறுதியானால் அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு அது எப்படி ஏற்பட்டது என்று சுகாதாரத்துறையினரிடம் அவர்கள் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் தொற்று உறுதியானவர்களோடு தொடர்புடையவர்கள் மற்றும் அவரோடு தொடர்புள்ளவர்கள் என்று கடைசியாக யாரிடம் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தெரிய வேண்டும்.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சளி மாதிரி எடுக்கப்பட்டு அதில் தொற்று உறுதியானால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதைத்தான் கொரோனா சோர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் சிலருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? என்று தெரியவில்லை.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story