ஊரடங்கு தளர்வு 43 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு கோவையில் சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்கின


ஊரடங்கு தளர்வு 43 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு கோவையில் சிறு,குறு தொழிற்சாலைகள் இயங்கின
x
தினத்தந்தி 7 May 2020 2:27 AM GMT (Updated: 2020-05-07T07:57:55+05:30)

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கோவையில் 43 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டது. சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கின. தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து வேலைக்கு சென்றனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று கோவை மாநகரில் டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், கிராஸ்கட் ரோடு, திருச்சி ரோடு, அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இரும்பு, சிமெண்டு கடைகள், ஹார்டுவேர்ஸ், சைக்கிள் கடைகள், விளையாட்டுப் பொருட்கள், மெக்கானிக்கல் கடைகள், செல்போன் பழுது பார்த்தல், கண் கண்ணாடி கடைகள், மளிகை கடைகள், பேக்கரி, பழக்கடைகள் திறந்து இருந்தன. மேலும் கோவை உக்கடம், காந்திபுரம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்ட காய்கறி சந்தைகள், மீன் மார்க்கெட்டுகள் வழக்கம் போல் இயங்கின.

கடைவீதிகளில் கடைகள் திறக்கப்பட்டதால் இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர். ஆனால் மால்கள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி, நகைக்கடைகள், குளிர்சாதன வசதியுடன் உள்ள துணிக்கடைகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள் அங்காடி, பூ மார்க்கெட், டீக்கடை, குளிர்பான கடை, சலூன், அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை.

தொழிற்பேட்டைகள்

கோவை புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநகர பகுதிகளில் சிறு, குறு, நடுத்தர தொழில் கூடங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி புறநகர் பகுதியில் அமைந்துள்ள கோவை ஈச்சனாரி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளன. ஆனால் 50 சதவீத தொழிலாளர்களை மட்டுமே கொண்டு இயக்கப்படுகின்றன.

வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து சென்றனர். அவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல தொழிற்சாலைகளில் உள்ள கருவிகள், எந்திரங்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதுகுறித்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:-

வருமானம் இழப்பு

43 நாட்களாக தொழில் கூடங்கள் மூடப்பட்டு இருந்ததால் உற்பத்தி முடக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டது. தற்போது தளர்வுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து தொழிற்சாலைகளை இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. ஊரடங்கிற்கு முன்னர் அனுப்பப்பட்ட உற்பத்தி பொருட்களுக்காக தொகை கிடைக்க பெறவில்லை. இனி ஜாப் ஆர்டர்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதேபோல சிறு, குறு தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் அவர்கள் சொந்த ஊர் செல்லும் முனைப்பில் உள்ளனர். இதனால் வட மாநில தொழிலாளர்களை தக்க வைப்பதில் சிக்கல் உள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 2 லட்சம் தொழிலாளர்கள் முழுவதும் வேலைக்கு வர வேண்டும். இதுபோல் அனைத்து நிறுவனங்களும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இயங்கினால் மட்டுமே தொழில் உற்பத்தி முழுமையாக இருக்கும். இல்லாவிட்டால் அரைகுறையாக உற்பத்தியின்றி தேக்கநிலையே தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இயல்பு வாழ்க்கை

ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் அடிப்படையில் பெரிய வணிக நிறுவனங்களை தவிர்த்து பல்வேறு கடைகள் திறக்கப்பட்டதாலும், சிறு,குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதாலும் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த 43 நாட்களுக்கு பிறகு ஓரளவு இயல்புவாழ்க்கை திரும்பியதை காணமுடிந்தது.

Next Story