ஊரடங்கு காலத்தில் மது விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கவர்னர் கிரண்பெடி தகவல்


ஊரடங்கு காலத்தில் மது விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 7 May 2020 9:11 AM IST (Updated: 7 May 2020 9:11 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காலத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடப்பதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் மது, சாராய விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தன. இந்த தடையை மீறி புதுவையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. இதுபற்றி உரிய விசாரணை நடத்த கவர்னர் கிரண்பெடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாநிலம் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மதுக்கடைகளின் இருப்பு விவரங்களை சோதனை செய்தது. அதில் பல கடைகளில் இருப்பு குறைந்து இருந்தது. அந்த கடைகள் முறைகேடு செய்து இருப்பதாக கருதப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணைக்குழு கலைப்பு

100 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கலால் துறை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். மது விற்பனைக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் மற்றும் போலீசார் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மது விற்பனை சிறப்பு விசாரணை குழுவை கலைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் சி.பி.ஐ. போலீசார் இதில் தலையிட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் மது விற்பனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.பி.ஐ. விசாரணை

இது தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு காலத்தில் கலால் சட்ட விதிகள் மீறல் தொடர்பாக மொத்தம் 236 வழக்குகள் பதிவானது. இதில் சில கலால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். சிலர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். முக்கியமாக கலால் துறை துணை ஆணையர் பதவியில் இருந்தவர் மாற்றப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார்.

கள்ள சந்தையில் மது விற்பனை ஒருங்கிணைந்த குற்றம். இதனால் அதிகளவு வருவாய் இழப்பு மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்த காலத்தில் நடந்த கள்ள மது விற்பனை தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்வழக்கில் ஏதேனும் தகவல் இருந்தால் சி.பி.ஐ.யிடம் அளிக்கலாம்.

தகவல் தெரிவிக்கலாம்

ஏற்கனவே சி.பி.ஐ. கிளை புதுச்சேரியில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தகவல் இருந்தால் கவர்னர் மாளிகையின் தலைமை குறைகேட்கும் அதிகாரி பாஸ்கரனிடம் 95005 60001 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அந்த தகவல் ரகசியம் காக்கப்படும்

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி குறிப்பிட்டுள்ளார்.

Next Story