திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 7 May 2020 5:36 AM GMT (Updated: 7 May 2020 5:36 AM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சிவன், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊரடங்கால் யாரும் கிரிவலம் செல்லவில்லை. இதனால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் உள்ளே வராதபடி கோபுர வாசல் அடைக்கப்பட்டுள்ளது. எனினும், கோவிலில் தினமும் சாமிக்கு 6 கால பூஜைகள் நடந்து வருகிறது.

சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவம் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 27-ந் தேதி தொடங்கி, தினமும் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வந்தது. நேற்று உற்சவ நிறைவு விழா நடந்தது.

சிறப்பு அபிஷேகம்

வழக்கமாக சித்திரை வசந்த உற்சவ நிறைவு விழாவில் மதியம் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு 10 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி ஆகியவை நடக்கும். ஆனால் இந்த ஆண்டு இரு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

கோவிலில் காலை, மாலை சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், பல வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு உள்ள சித்ர குப்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலின் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளை பக்தர்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே பார்த்தனர்.

கிரிவலப்பாதை வெறிச்சோடியது

நேற்று இரவு 7.01 மணிக்கு சித்ரா பவுர்ணமியை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது. வழக்கமாக சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்வார்கள். ஆனால் ஊரடங்கால் யாரும் கிரிவலம் செல்லவில்லை. இதனால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story