டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 15 பேர் கைது


டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 15 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2020 10:45 PM GMT (Updated: 7 May 2020 8:14 PM GMT)

டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சி யினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர், 

டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்ததை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று காலை கருப்பு பேட்ஜ், கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்த போராட்டத்துக்கு சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார்.

தி.மு.க.மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், ம.தி.மு.க.மாநகர மாவட்ட செயலாளர் சிவபாலன், காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கராஜ், கொ.ம.தே.க. சார்பில் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சின்னம், கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

இதுபோல் திருப்பூர் குமரன் ரோடு, கோர்ட்டு ரோடு சந்திப்பு பகுதியில் தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காமராஜ், கொ.ம.தே.க.சார்பில் சுரேஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, கொ.ம.தே.க., ம.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உழைக்கும் பெண்கள் பிரிவு(ஏ.ஐ.டி.யு.சி.) மாநில நிர்வாககுழு உறுப்பினர் பஞ்சவர்ணம்,ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.கோபி தலைமையில் கட்சியினர் சந்தராபுரம் ராஜிவ்காந்தி நகரில் உள்ள அவரது நிறுவனம் முன்பு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில சிறுபான்மையினர் துணைத்தலைவர் .டி.கே.சித்திக் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் நூர் உல்ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி பகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற துணைத்தலைவரும், ஊராட்சி கழக செயலாளருமான சி.டி.சி வேலுச்சாமி தலைமையில் கட்சியினர் மதுக்கடைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சி.டி.சி வேலுச்சாமி உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். மங்கலத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பல்லடம்

பல்லடம் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதுபோல் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவினாசி ஒன்றியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷம் எழுப்பினர். திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில துணை பொது செயலாளர் விடுதலை செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story