ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறப்பு


ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 7 May 2020 11:15 PM GMT (Updated: 7 May 2020 8:55 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. குடிமகன்கள் மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்கள் வாங்கிச்சென்றார்கள்.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் பொது ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதற்கிடையே கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து உள்ள பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கான கடைகள், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மதுக்கடைகள் திறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குடிமகன்கள் ஒருவரை ஒருவர் ஒட்டிக்கொண்டு நிற்பதை தடுக்க சவுக்கு கம்புகளால் வேலி அமைக்கப்பட்டு இடைவெளி ஏற்படுத்தும் வகையில் அடையாளம், குறுக்கு கம்புகளும் கட்டப்பட்டன.

நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் காலை 8 மணிக்கே குடிமகன்கள் கடைகளுக்கு வந்து வரிசையில் இடம் பிடிக்கத்தொடங்கினார்கள். அனைத்து கடைகளின் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதுவாங்க வந்தவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளனரா? இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்தனர்.

காலையில் கடை திறந்ததும் குடிமகன்கள் புதுப்படத்தை பார்க்க டிக்கெட் வாங்க செல்வதுபோல வேகம் வேகமாக முன்னேறினார்கள். ஒரு நபருக்கு ஒரு புல் பாட்டில் என்ற அளவில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதை குடிமகன்கள் 4 குவார்ட்டர் அல்லது 2 ஆப் பாட்டில்களாகவும் வாங்கிச்சென்றனர்.

சிலர் பாட்டில்களை கையில் வாங்கியதும் அதை முத்தமிட்டு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியதுபோன்று உயர்த்திக்காட்டினார்கள். இந்த உற்சாகம் அனைத்து குடிமகன்களையும் தொற்றிக்கொண்டது. நீண்ட வரிசையில் காத்து நின்றாலும் எந்த ஒரு புகாரும் கூறாமல் அவர்கள் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். சில கடைகளில் மதுவாங்க வந்தவர்கள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் உள்ள மதுக்கடையில் ஆதார் அட்டை காண்பித்தவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது. பவானி ரோடு மூலப்பட்டறை பகுதியில் உள்ள மதுக்கடைக்கு வந்தவர்களுக்கு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசாரே டோக்கன் வழங்கி கூட்டத்தை வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ஈரோடு பஸ் நிலையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், பன்னீர்செல்வம் பூங்கா, வில்லரசம்பட்டி என்று ஈரோட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் குடிமகன்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக ஊரடங்கின்போது மோட்டார் சைக்கிள்களில் வருபவர்களை தடுத்து துரத்தும் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வரிசையில் நிற்க வசதி செய்து கொடுத்தனர். சில கடைகளில் இருந்து மதுபாட்டில்களை கைகளில் கொள்ளாத அளவுக்கு அடுக்கி எடுத்து வந்தனர். சிலர் கையோடு பைகளை கொண்டு வந்து பாட்டில்களை வைத்து மறைவாக கொண்டு சென்றனர்.

ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோ கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் 203 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 142 கடைகள் மட்டுமே இயங்குகின்றன. சில கடைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் உள்ளன. காலையில் இருந்தே மதுவிற்பனை சராசரியாக நடந்து வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிந்து இடைவெளியை கடைபிடித்து வருகிறார்கள். அசம்பாவிதங்கள் ஏதுமின்றி விற்பனை நடந்து வருகிறது’ என்றார்.

Next Story