நெல்லையில் மதுக்கடை திறப்புக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்
நெல்லையில் மதுக்கடை திறப்புக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
காங்கிரஸ்
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் நேற்று போராட்டங்களும் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் பாளையங்கோட்டையில் தமிழக அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், தொண்டர் அணி துணை செயலாளர் ஆவின் ஆறுமுகம், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், மருத்துவர் அணி அமைப்பாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை அருகே நாரணம்மாள்புரத்தில், தி.மு.க. முன்னாள் பேரூராட்சி தலைவர் பேச்சிப்பாண்டியன் தலைமையில் டாஸ்மாக் மதுக்கடை முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. கட்சியினர் போராட்டத்தின்போது கருப்பு சட்டையும், ஒருசிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டனர்.
நெல்லையில் மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொருளாளர் அருண்குமார், டவுன் பகுதி செயலாளர் கோபி என்ற நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் வண்ணார்பேட்டையில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு, கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தச்சநல்லூர் அண்ணா சிலை முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ம.தி.மு.க.
ம.தி.மு.க. சார்பில் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலக வளாகத்தில், நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் அந்த கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், மாவட்ட குழு உறுப்பினர் வரகுணன், நிர்வாகி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சியினர் நெல்லை மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திரண்டனர். அவர்கள் அங்கு வாய்க்கால்பாலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்கள் கட்சி கொடிகளுடன் வந்தனர். போலீசார் அவர்களை கயிறு கட்டி தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் திருவனந்தபுரம் மெயின் ரோட்டில் நின்று மதுக்கடையை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் கடையை திறக்ககூடாது. மது இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு முன்வரவேண்டும். தமிழகம் முழுவதும் கோவில்களை திறந்து பூஜை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடையார் உள்பட 13 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்து தேசிய கட்சி நிறுவன தலைவர் மணி நேற்று டவுனில் உள்ள காந்தி சிலை முன்பு வந்தார். அங்கு அவர் கோரிக்கை அட்டையை கையில் ஏந்தியவாறு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் பாளையங்கோட்டை அம்பேத்கர் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பல்வேறு இடங்களில் மதுக்கடைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
மனிதநேய மக்கள் கட்சி
மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் குழந்தைகளோடு கருப்பு சட்டை அணிந்து மதுக்கடையை மூட வலியுறுத்தி கோரிக்கை அட்டைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்.
இதேபோல் மேலப்பாளையம் பகுதி தலைவர் மைதீன் பாதுஷா, செயலாளர் காஜா மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் அவரவர் வீடுகள் முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தை நடத்தினர்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மேலப்பாளையத்தில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story