மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி: நெல்லை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சாவு


மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி: நெல்லை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சாவு
x
தினத்தந்தி 8 May 2020 5:00 AM IST (Updated: 8 May 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் இறந்தார். நெல்லை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 63 பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேலப்பாளையத்தை சேர்ந்த 83 வயது முதியவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், அவரை கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவர் திடீரென்று இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் மேலப்பாளையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மேலப்பாளையத்தை சேர்ந்த 83 வயது நபர் நேற்று மதியம் 2.30 மணி அளவில் இறந்தார்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 2 பேர் மேலப்பாளையத்தையும், ஒருவர் வள்ளியூர் அருகே உள்ள சித்தூரை சேர்ந்த 32 வயது நபரும் ஆவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதால், மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.

வள்ளியூர் சித்தூரில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்து அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து உள்ளார். அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சித்தூர் கிராமத்தை சுகாதார மற்றும் காவல்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இன்ஸ்பெக்டர் திருப்பதி, வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணி, ஸ்ரீகாந்த் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பணிகளை மேற்கொள்கின்றனர். கிராமம் முழுவதும் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினர் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் 14 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 12 பேர் ஏற்கனவே குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். மற்ற 39 பேர் நெல்லை, தென்காசி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மற்ற 36 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 27 பேரில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு 29 ஆக இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து தென்திருப்பேரை அருகே உள்ள சேரகுளத்துக்கு வந்த ஒருவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் சேகரித்து, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


Next Story