விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 3:24 AM IST (Updated: 8 May 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் 11 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் கொரோனா ஊரடங்கால் 40 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை ஆனது. மேலும் பல இடங்களில் மதுபிரியர்கள், ஆத்திரத்தில் கடைகளை துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய பகுதி மதுக்கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு விருத்தாசலம் சூரியகாந்தி மணிலா எண்ணெய் பிழியும் ஆலையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டது.

தடுப்புகள் அமைக்கும் பணி

இதையடுத்து நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பையொட்டி மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அந்தந்த மதுக்கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும் மதுபிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபாட்டில்கள் வாங்கி செல்லும் விதமாகவும் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி நேற்று காலை விருத்தாசலம் ரெயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் தடுப்புகள் அமைக் கும் பணி நடைபெற்றது. இது குறித்து அறிந்த நாச்சியார்பேட்டை பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று தடுப்புகள் அமைக்க கூடாது. மேலும் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கோஷங்களை எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தள்ளு-முள்ளு

தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி, ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர். அப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. மீறி திறந்தால் மதுப்பிரியர்களால் எங்களுக்கு பெருமளவில் தொல்லை ஏற்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் அலங்கோலமாகவும், மற்றவர்களை தகாத வார்த்தைகளால் பேசியும் சுற்றித்திரிவர். அதுமட்டுமில்லாமல் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சமூக பரவலுக்கு நாமே வழி அமைத்து கொடுத்து விடக்கூடாது என கூறினர்.

பரபரப்பு

இதையடுத்து போலீசார் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து சிலர் கலைந்து போக மறுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story