நாமக்கல்லில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’


நாமக்கல்லில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 8 May 2020 6:55 AM IST (Updated: 8 May 2020 6:55 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 188 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதற்கிடையே தமிழக அரசு நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள கடைகளை தவிர இதர டாஸ்மாக் கடைகளை நேற்று முதல் திறக்க அனுமதி அளித்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள 20 கடைகளை தவிர இதர டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழங்கப்பட்டு உள்ள வண்ண அட்டையுடன் வரும் நபர்களுக்கே மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிலும் நேற்று பச்சை வண்ண அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டது.

‘சீல்’ வைப்பு

ஆனால் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வண்ண அட்டை இல்லாத நபர்களுக்கு மது விற்கப்படுவதாகவும், எலைட் கடையில் ஒரு நபருக்கு ஒரு ‘புல்’ மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை மீறி அதிக சரக்குகளை விற்பனை செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மெகராஜ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அந்த கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 டாஸ்மாக் கடைகளுக்கும் ‘சீல்’ வைத்தனர்.

இதனால் அந்த கடைகளுக்கு பிற்பகலுக்கு மேல் மதுபானம் வாங்க வந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

Next Story