கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளிக்கு கொரோனா: சேர்ந்தமரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது


கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளிக்கு கொரோனா: சேர்ந்தமரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 8 May 2020 11:00 PM GMT (Updated: 8 May 2020 7:03 PM GMT)

சென்னை கோயம்பேட்டில் இருந்து சேர்ந்தமரம் கிராமத்துக்கு வந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது.

சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை சேர்ந்த ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா பாதிப்பால் அந்த மார்க்கெட்டுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் லாரியில் ஏறி சங்கரன்கோவில் வரை வந்து உள்ளார். பின்னர் அங்கிருந்து நடந்தே சொந்த ஊரான சேர்ந்தமரத்துக்கு வந்தார்.

தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி விட்டு அவரை வீட்டில் தனிமைப்படுத்தினர். ஆனால் அவர் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதும் தனது நண்பர்களுடன் கள்ளம்புளி அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தனிமைப்படுத்தப்பட்டது

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உதவி இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு ஆகியோர் சேர்ந்தமரத்துக்கு வந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீடு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த வீடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

சேர்ந்தமரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தாசில்தார் அழகப்பராஜா தெரிவித்தார். கிராமத்தின் நான்கு எல்லைகளும் ‘சீல்‘ வைக்கப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 2 மதுக்கடைகள் மட்டும் வழக்கம்போல் மாலை 5 மணி வரை இயங்கியது. இந்த பகுதியில் மட்டும் சென்னையில் இருந்து வந்தவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் உள்பட மொத்தம் 20-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story