நெல்லை அருகே தொழிலாளி கொலையில் 3 பேர் கைது


நெல்லை அருகே தொழிலாளி கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-09T02:39:22+05:30)

நெல்லை அருகே தொழிலாளி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கபாண்டி மகன் இசக்கிமுத்து (வயது 38). தொழிலாளி. இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இசக்கிமுத்து அந்த பகுதியில் உள்ள கோவில் பகுதியில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (22), சுரேஷ் ராஜா (27) மற்றும் ஜெபராஜ் (26) ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர். அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேரும் சேர்ந்து இசக்கிமுத்துவை கல் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்து இறந்தார்.

இதுதொடர்பாக தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று சுரேஷ், சுரேஷ் ராஜா மற்றும் ஜெபராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “எங்கள் 3 பேர் பற்றி போலீசாருக்கு இசக்கிமுத்து தகவல் கூறிவந்ததாக அறிந்தோம். மேலும் முன்விரோதமும் இருந்து வந்தது. இதுகுறித்து தட்டிக்கேட்ட போது எதிர்த்து பேசினார். இதனால் அவரை கொலை செய்தோம்“ என்று கூறி உள்ளனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story