நெல்லையில் மிலிட்டரி கேண்டீன் திறப்பு: பொருட்கள் வாங்க குவிந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்
நெல்லையில் மிலிட்டரி கேண்டீன் நேற்று திறக்கப்பட்டதால், பொருட்கள் வாங்க முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டையில் மத்திய பாதுகாப்பு துறை சார்ந்த மிலிட்டரி கேண்டீன் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படை ஆசிரியர்கள் ஆகியோர் பொருட் கள் வாங்கி செல்வார்கள்.
அவர்களுக்கு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேவையானவர்களுக்கு மதுபாட்டில்களும் விதிகளின்படி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இந்த மிலிட்டரி கேண்டீனும் மூடப்பட்டது. தற்போது நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் மீண்டும் மிலிட்டரி கேண்டீன் நேற்று திறக்கப்பட்டது.
அங்கு பொருட்கள் வாங்குவதற்காக முன்னாள் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் குவிந்தனர். இதனால் அங்குள்ள ரோட்டில் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. சமூக இடைவெளி பின்பற்றாமல் அனைவரும் கூட்டமாக நின்றனர்.
இதை அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள், கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்தி வரிசையாக சமூக இடைவெளியுடன் நின்று பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்தனர்.
சிலர் தங்களது பைகளை இடைவெளி விட்டு போட்டு இடம் பிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story