காய்கறி மார்க்கெட்டாக மாறிய நெல்லை புதிய பஸ் நிலையம்: மொத்த விற்பனை தொடங்கியது
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நெல்லை புதிய பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டது.
நெல்லை,
கொரோனா வைரஸ் மக்கள் நெருக்கம் மூலம் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சமூக இடைவெளியை உருவாக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு மார்க்கெட்டுகளுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து நெல்லை மாநகரில் டவுன் மற்றும் பாளையங்கோட்டையில் இருந்த மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக பல்வேறு இடங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் வளாகத்தில் இருந்த சில்லறை காய்கறி விற்பனை கடைகள் அனைத்தும் சாப்டர் பள்ளி மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள 30 மொத்த காய்கறி கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா வேகமாக பரவியது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டை மூடி ‘சீல்‘ வைத்தனர்.
இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சாப்டர் பள்ளி வளாகத்தில் அவர்களது சில்லறை விற்பனை கடைகளையும் திறக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டை நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அங்கு காய்கறிகளை மொத்தமாக கொண்டு வந்து வியாபாரம் செய்ய வசதியாக தற்காலிக மார்க்கெட் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து வியாபாரிகள் நேற்று காய்கறி லோடுகளை புதிய பஸ் நிலையத்தில் கொண்டு வந்து இறக்கினர். இதனால் நெல்லை புதிய பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாறி உள்ளது.
அங்கு இரவில் ஏலம் மற்றும் விற்பனை தொடங்கி நடைபெற்றது. அங்கிருந்து வியாபாரிகள் தங்களுக்கு தேவையான அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கிச்சென்றனர். மொத்த காய்கறி மார்க்கெட் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால், இன்று (சனிக்கிழமை) முதல் சாப்டர் பள்ளி வளாக காய்கறி கடைகளும் திறக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story