நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக விற்பனை மும்முரம்


நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் 2-வது நாளாக விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 9 May 2020 4:30 AM IST (Updated: 9 May 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று 2-வது நாளாக விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

நெல்லை, 

கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டு, வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது. அதையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மது பாட்டில் விற்பனை களை கட்டியது. வழக்கமாக ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை விற்பனை ஆகி வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளிலும் மது விற்பனை மும்முரமாக நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து மதுக்கடைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடந்தது. முதல் நாளில் குவிந்தது போல் அல்லாமல் நேற்று குறைந்த அளவு கூட்டமே இருந்தது. அவர்கள் சமூக இடைவெளி விட்டு மதுபாட்டில்கள் வாங்கினார்கள். ஆதார் கார்டு, மாநகராட்சி அனுமதி அட்டை ஆகியவற்றை கேட்டு நெருக்கடி கொடுக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட வயது உடையோர் வந்து வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் பின்பற்றப்படவில்லை.

Next Story