ஆரணியில் கொரோனா தொற்று எதிரொலி: 3 டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை


ஆரணியில் கொரோனா தொற்று எதிரொலி: 3 டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 May 2020 4:30 AM IST (Updated: 9 May 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே ஆரணியில் கொரோனா தொற்று பரவி வருவதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 3 டாஸ்மாக் கடைகளுக்கு திடீரென ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் காய்கனி வியாபாரி, சுமை தூக்கும் தொழிலாளி என 2 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆரணி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனோ உறுதியானது.

மேலும், கொசவன்பேட்டை ஊராட்சியில் உள்ள வேன் டிரைவர் ஒருவருக்கும், பூச்சி ஆத்திபேடு கிராமத்தில் காய்கறி வியாபாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், ஆரணி-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அரசு உத்தரவுப்படி திறக்கப்பட்ட 2 டாஸ்மாக் கடைகள், ஆரணி பஜாரில் உள்ள கம்மாள தெரு மதுபானக்கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதற்கிடையே, ஆரணி புதுவாயல் நெடுஞ்சாலையில் கண்டிகை பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிமகன்கள் வரிசையில் நின்றனர். போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். மேலும், ஆரணி-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ராள்ளபாடி டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை மூடுமாறு வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் விரைந்து போக்குவரத்தை சீரமைத்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்.

மேலும் அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த குறிப்பிட்ட மதுக்கடையில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக கூடி நின்று சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

இதனால் மெய்யூர் பகுதியில் நோய் தாக்கம் ஏற்படும் என்று கூறி ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு, ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி, ஏழுமலை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் அங்கு வந்து, ஊராட்சிமன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட 12 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Next Story