ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கியது நோயாளிகளின் உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு


ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கியது நோயாளிகளின் உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 8 May 2020 11:31 PM GMT (Updated: 8 May 2020 11:31 PM GMT)

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கியது. நோயாளிகளுடன் வந்த உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தொடர்ந்து மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக புதுவை ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதேபோல் பிரசித்தி பெற்ற ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படத் தொடங்கியது. ஆனால் ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மத்திய மந்திரியிடம் புகார்

ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காததால் புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக அங்கு வைரஸ் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.

மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாதது புதுவை அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி மத்திய சுகாதாரத் துறை மந்திரிக்கு ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்தார்.

தொலைபேசி மூலம் முன்பதிவு

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஜிப்மர் நிர்வாகம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை தொடங்க முன்வந்தது. அதன்படி நேற்று முதல் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்கியது. தொலைபேசி மூலம் முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நோயாளிகளுடன் வந்த உறவினர்கள் யாரும் ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகள் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story