கோரிமேடு எல்லையில் புதுவை, விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு


கோரிமேடு எல்லையில் புதுவை, விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 8 May 2020 11:38 PM GMT (Updated: 2020-05-09T05:08:30+05:30)

கோரிமேடு எல்லையில் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அருகில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. மாநில எல்லைகள் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை புதுவை கோரிமேடு எல்லையில் புதுவை மாவட்ட கலெக்டர் அருண், விழுப் புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் வாகன ஓட்டிகளின் ஆவணங்களை வாங்கி சரி பார்த்தனர். அத்தியாவசிய தேவைக்கு வந்தவர்களை மட்டும் இருமாநில போலீசார் புதுவைக்கு வர அனுமதித்தனர். அப்போது மாநில எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை விவரங்களையும் அவர்கள் கேட்டறிந்தனர்.

ஆய்வு குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு சிரமமின்றி...

திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கோரிமேடு எல்லையில் இரு மாநில போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிக்கு வருபவர்கள், உரிய தேவைக்காகத்தான் வருகிறார்களா? என ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தேவையில்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். விழுப்புரம் - புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் இணைந்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது புதுச்சேரி சப்-கலெக்டர் சுதாகர், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story