கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 722 ஆக உயர்வு


கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 722 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 May 2020 12:22 AM GMT (Updated: 9 May 2020 12:22 AM GMT)

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 48 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்து உள்ளது.

பெங்களூரு, 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

அதுபோல் இந்தியாவையும் கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 54 ஆயிரம் பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 674 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் இந்த நோய் தாக்குதலுக்கு 31 பேர் பலியாகி இருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் கர்நாடகத்தில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் விவசாய பணிகள், கட்டிடப் பணிகள், தொழிற்சாலைகள் செயல்பட கர்நாடக அரசு அனுமதி அளித்து ஊரடங்கை தளர்த்தி உத்தரவிட்டது. அதுபோல் 40 நாட்களாக மூடப்பட்டு கிடந்த மதுக்கடைகளும் 4-ந் தேதி முதல் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா

மேலும் வியாபார நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. இதனால் மக்கள் ஓரளவு இயல்புநிலைக்கு திரும்பிவிட்டனர். கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாவணகெரேயில் 14 பேர்

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 674 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 48 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பாதித்தோர் எண்ணிக்கை 722 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 376 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 31 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் பெங்களூருவை சேர்ந்த 7 பேர், பல்லாரியை சேர்ந்த ஒருவர், பெலகாவியை சேர்ந்த 11 பேர், தாவணகெரேயை சேர்ந்த 14 பேர், உத்தரகன்னடாவை சேர்ந்த 12 பேர், சித்ரதுர்காவை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை 21 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 98 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 4 ஆயிரத்து 546 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் கலக்கம்

கர்நாடகத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென பாதிப்பு அதிகரித்து இருப்பது மக்களை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுபோல் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் வெளிநபர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

Next Story