சேலத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


சேலத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2020 4:50 AM GMT (Updated: 9 May 2020 4:50 AM GMT)

சேலத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.

சேலம்,

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டன. இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அலுவலகம் முன்பு நேற்று காலை டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தமிழகத்தில் கொரோனா வைரசால் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும். திறக்கப்பட்ட மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றும், அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story