வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்


வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 May 2020 4:15 AM IST (Updated: 9 May 2020 10:24 PM IST)
t-max-icont-min-icon

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தென்காசி மாவட்டம் வருபவர்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்காசி, 

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்க முதல் அமைச்சர் உத்தரவின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்துக்குள் அதிக அளவு முறையான அனுமதி இல்லாமல் வருவதாக தெரிகிறது.

அவ்வாறு வரக்கூடியவர்கள் வந்த நாள் முதல் 28 நாட்கள் நோய் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

எனவே வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தாங்களாகவே முன்வந்து அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு, அருகே உள்ள வீட்டிற்கோ, அலுவலகத்துக்கோ, தொழிற்சாலைகளுக்கோ வரும் பிற மாநிலம், வெளி மாவட்டம் அல்லது வெளி நாட்டவர்கள் தொடர்புடைய தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசர கட்டுப்பாட்டு அறை

தென்காசி மாவட்டத்துக்கு பணி நிமிர்த்தமாகவோ அல்லது பணிக்கு சென்று திரும்பினாலோ அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், நகராட்சி, பேரூராட்சி அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இது தொடப்பான தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறை எண் 04633 290548 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story