திருப்பூர் மாவட்டத்தில் 217 டாஸ்மாக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு: ஏக்கத்துடன் சுற்றி வந்த மதுபிரியர்கள்


திருப்பூர் மாவட்டத்தில் 217 டாஸ்மாக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு: ஏக்கத்துடன் சுற்றி வந்த மதுபிரியர்கள்
x
தினத்தந்தி 10 May 2020 4:30 AM IST (Updated: 10 May 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 217 டாஸ்மாக் கடைகள் அனைத்தும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இருப்பினும் மதுக்கடைகளுக்கு அருகே ஏக்கத்துடன் மதுபிரியர்கள் சுற்றி வந்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 7-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டு செயல்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 238 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மாநகரில் 12 கடைகள் உள்பட மொத்தம் 21 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. 217 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டன. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபிரியர்கள் மது வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதார் கார்டு மற்றும் குடையுடன் வருபவர்களுக்கு டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடந்தது.

2-வது நாளாக நேற்றுமுன்தினமும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்தந்த கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் டாஸ்மாக் கடையை பூட்டி ‘சீல்’ வைத்து சாவியை மாவட்ட மேலாளரிடம் ஒப்படைத்தனர். அதன்படி மாவட்டத்தில் திறக்கப்பட்ட 217 டாஸ்மாக் கடைகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

மதுக்கடைகள் பூட்டிய பிறகும் காலை 10 மணி முதல் மதுபிரியர்கள் ஒவ்வொரு கடைகளுக்கு அருகிலேயேயும் மதுபானம் கிடைக்குமா? என ஏக்கத்துடன் சுற்றி,சுற்றி வந்தனர்.நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் மதுபிரியர்கள் கலைந்து சென்றனர். திருப்பூர் மங்கலம் பழக்குடோன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, எம்.எஸ்.நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது கிடைக்குமா? என மதுபிரியர்கள் காத்திருந்து பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story