கூடங்குளத்தில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல்: இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்


கூடங்குளத்தில் போலீசார் மீது வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல்: இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்
x
தினத்தந்தி 10 May 2020 4:30 AM IST (Updated: 10 May 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி கூடங்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 3, 4-வது அணுஉலைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக அணுமின் நிலையத்தில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை இன்றி அங்குள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, சம்பளம் போன்றவை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கி, அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வடமாநில தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கோரி அணுமின் நிலைய வளாக பகுதிகளில் இருந்து வெளியேறி அணுமின்நிலைய நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், அரசு அனுமதி பெற்று போக்குவரத்து வசதி ஏற்படுத்தி சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் நேற்று காலையில் திரண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்றனி ஜெகதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனை போலீசார் தடுத்தனர். அப்போது தொழிலாளர்கள், இன்ஸ்பெக்டர் ஆண்றனி ஜெகதா, போலீஸ் ஏட்டு சக்திவேல் ஆகியோர் மீது கல்வீசியும், கம்பாலும் தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் கூடங்குளம் பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, இன்பதுரை எம்.எல்.ஏ. மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள், தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், சொந்த ஊருக்கு செல்வதற்காக பதிவு செய்துள்ள 3,344 வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் விரைவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்காக அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஒப்பந்த நிறுவனங்கள் கடந்த 2 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர். அவர்களது சம்பள பணத்தை உடனடியாக ஒப்பந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. கூறும்போது, ‘கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற பாதுகாப்பான இடங்களில் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து பணிகள் செய்வது ஏற்புடையதல்ல. ஒப்பந்த பணியாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதில் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் கடமையுண்டு. விரைவில் மத்திய, மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்‘ என்றார்.


Next Story