நெல்லையில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு


நெல்லையில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 May 2020 5:00 AM IST (Updated: 10 May 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

பேட்டை, 

நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 30 வயது வாலிபர் திருவண்ணாமலையில் மில் வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கால் அங்கேயே தங்கி இருந்தார். கடந்த 7-ந்தேதி சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இதை அறிந்த வருவாய்த்துறை ஊழியர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அஷ்ரப் அலி தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த வாலிபருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார்.

அவரது வீட்டில் மனைவி, 2 குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரது வீடு அமைந்திருக்கும் பிள்ளையார் கோவில் தெரு அடைக்கப்பட்டது. அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

சென்னையில் இருந்து வள்ளியூர் அருகே உள்ள சித்தூருக்கு வந்திருந்த டிரைவருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சித்தூர் கிராமத்தை சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் தனிமைப்படுத்தினர். அங்கு அதிகாரிகள் முகாமிட்டு, கிராமம் முழுவதும் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான பொருட்களை செஞ்சிலுவை சங்கத்தினர் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த வீட்டில் உள்ள அவரது உறவினர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் நேற்று முன்தினம் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மேலும் 7 பேருக்கு நேற்று காலையில் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதில் 4 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் 13, 16, 38, 49 வயது உடையவர்கள். இதன்மூலம் சித்தூர் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

இதுதவிர ஏற்கனவே 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று மாலை மேலும் 4 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆனார்கள். மீதமுள்ள 17 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அந்த மாவட்டத்தில் 52 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 21 பேர் டிஸ்சார்ஜ் ஆகி இருந்த நிலையில் நேற்று மேலும் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதையடுத்து அந்த மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story