சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி என்.எல்.சி. அனல்மின்நிலையம் முன்பு திரண்ட வெளிமாநில தொழிலாளர்கள்


சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி என்.எல்.சி. அனல்மின்நிலையம் முன்பு திரண்ட வெளிமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 10 May 2020 3:26 AM IST (Updated: 10 May 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலையம் முன்பு வெளி மாநில தொழிலாளர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கொல்லிருப்பு அருகே என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை கொண்டு 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு நடைபெறும் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை இல்லாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி இருந்து வருகின்றனர்.

அனல்மின்நிலையம் முன்பு திரண்டனர்

இந்நிலையில் தற்போது அவர்கள், தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்ப ஆன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிலர் பதிவு செய்ய தொடங்கினர். இந்த சூழ்நிலையில் நேற்று காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி என்.எல்.சி. புதிய அனல்மின்நிலையம் முன்பு ஒன்று திரண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெளிமாநில தொழிலாளர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

நடந்து செல்வோம்

இதை கேட்டறிந்த வெளி மாநில தொழிலாளர்கள், 2 நாட்களுக்குள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மூட்டை முடிச்சுகளுடன் நடந்தே செல்வோம் எனக்கூறிவிட்டு தங்கள் குடியிருப்பு பகுதிக்கு திரும்பி சென்றனர்.

வெளி மாநில தொழிலாளர்களுக்கு சாப்பாட்டிற்கு மாற்றாக சப்பாத்தி வழங்க ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. இதனால் நெய்வேலியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story