வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் கார், வேன் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக 5 ஆயிரம் கார், வேன் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். வழக்கமாக கோடை காலங்களில் சுற்றுலா வாகனங்களுக்கு மவுசு அதிகமாக காணப்படும். பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் கார் மற்றும் வேன்களை வாடகைக்கு எடுப்பார்கள். தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டு வைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார், வேன் டிரைவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதேபோல வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார், வேன் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூரை சேர்ந்த சுற்றுலா வேன் டிரைவர்கள் கூறியதாவது:-
வேலூர் நகருக்கு சிகிச்சைக்காக ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் வருகின்றனர். அவர்கள் சிகிச்சை முடிந்ததும் அருகில் உள்ள திருப்பதி மற்றும் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வார்கள். மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வோம். அவர்கள் பெரும்பாலும் கார், வேன்களை வாடகைக்கு எடுப்பார்கள். அதன் மூலம் நாங்கள் வருமானம் பெற்றோம். மேலும் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள குளிர் பிரதேச சுற்றுலா மையங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளோம்.
மே மாதம்தான் சுற்றுலா வாகனங்களுக்கு சீசன் காலம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கால் எங்களால் எங்கேயும் செல்ல முடிவதில்லை. தற்போது தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்பவர்களுக்குத்தான் அரசின் நல உதவிகள் கிடைக்கின்றன. ஆனால் தொழிலாளர் நலவாரியங்களில் 10 சதவீத தொழிலாளர்கள் தான் பதிவு செய்துள்ளோம். அதனால் பெரும்பான்மையான வேன் டிரைவர்கள், கிளனர்கள் அரசின் உதவித்தொகை பெற முடிவதில்லை. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். சுற்றுலா வேன் வைத்திருக்கும் பெரும்பான்மையானவர்கள் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி தான் வாகனங்களை வாங்கி உள்ளனர்.
நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வட்டி மற்றும் அசல் தொகை கட்ட வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். வருமானமில்லாததால் நாங்கள் அதை செலுத்த முடியவில்லை. தினமும் வாகனத்தை சிறிது நேரம் ஒரே இடத்தில் இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு இயக்காமல் விட்டு விட்டால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு விடுகிறது. அவ்வாறு இயக்க பயன்படுத்தும் எரிபொருள் செலவும் அதிகமாக உள்ளது. எனவே அரசு எங்களுக்கு தேவையான நிவாரண தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கார், வேன்களை வாடகைக்கு விடும் பத்மநாபன் மற்றும் டிரைவர்கள் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் டிரைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். நாள்தோறும் கார், வேன் ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் நாங்கள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் வேலையை இழந்து வருமானமின்றி பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம்.
சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் வழங்கி வரும் உணவு பொருட்களைக் கொண்டு தங்களது நாட்களை நகர்த்தி வரும் எங்களுக்கு இனி வரும் நாட்களில் குடும்பம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது.
ஊரடங்கு காரணமாக வாகனங்கள் ஓட்ட அனுமதி இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் தினமும் சுற்றுலா தலங்களுக்கும், கோவில்களுக்கும் மற்றும் பல்வேறு ஊர்களுக்கும் வாடகை கார், வேன்களில் செல்வார்கள். இதனால் எங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் எங்கும் செல்ல முடியாததால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். பள்ளிகள் திறந்ததும் எங்களது குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, வறுமைக்கோட்டின் கீழ் உள்ள எங்களின் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரைவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story