விசைப்படகுகள் மீன்பிடிக்க முன்கூட்டியே அனுமதி கிடைக்குமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு


விசைப்படகுகள் மீன்பிடிக்க முன்கூட்டியே அனுமதி கிடைக்குமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
x

மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 61 நாள் மீன் பிடி தடைக்காலமும் தொடங்கி அமலில் உள்ளதால் கடந்த 50 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது பற்றி பாம்பன் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி பேட்ரிக் கூறியதாவது:-

ஏற்கனவே தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே 20 நாட்களுக்கு மேலாக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் மீனவ குடும்பங்கள் பசி பட்டினியுடன் தவித்து வரும் நிலையில் 61 நாள் தடை காலத்தாலும் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தடை காலம் முடிய இன்னும் 1 மாதத்திற்கு மேல் உள்ளது. எனவே விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முன்கூட்டியே இந்த மாத இறுதியில் இருந்தே விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று ஒட்டு மொத்த மீனவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story