சென்னையில் இருந்து 2-வது கட்டமாக மணிப்பூர், ஆந்திராவுக்கு 2,345 தொழிலாளர்கள் பயணம் - 2 சிறப்பு ரெயில்களில் சென்றனர்
சென்னையில் இருந்து நேற்று 2-வது கட்டமாக மணிப்பூர் மற்றும் ஆந்திராவுக்கு 2 ஆயிரத்து 345 தொழிலாளர்கள் 2 சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை,
வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்து, அடிப்படை தேவைகளை கூட பூர்த்திசெய்ய முடியாமல் தவித்து வந்தனர். இவ்வாறு தவித்தவர்களை அரசு மீட்டு முகாம்களில் தங்கவைத்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பினால் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து செல்லலாம் என்றும் அரசு அறிவித்தது.
பதிவு செய்தவர்களை ரெயில் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் அரசு இறங்கி உள்ளது. அதன்படி காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட், பீகார் மாநிலங்களுக்கு ஏராளமானோர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து முதல்கட்டமாக நேற்று முன்தினம் 1,038 பேர் ஒடிசா மாநிலம் பூரிக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மணிப்பூர் மற்றும் ஆந்திராவுக்கு...
இந்தநிலையில் 2-வது கட்டமாக நேற்று இரவு 8 மணி, 10 மணிக்கு சென்னை எம்.ஜிஆர். சென்டிரலில் இருந்து மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் மற்றும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்துக்கும் 2 ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு 8 மணிக்கு நடைமேடை எண் 6-ல் இருந்து மணிப்பூர் நோக்கி புறப்பட்ட சிறப்பு ரெயில் ஆந்திரா, மராட்டியம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் வழியாக மணிப்பூர் மாநிலம் ஜிரிபம்க்கு 13-ந்தேதி மதியம் 3.35 மணிக்கு சென்றடையும்.
இந்த ரெயிலில் 1,148 வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல் இரவு 10 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்துக்கு புறப்பட்ட சிறப்பு ரெயிலில் 1,197 ஆந்திர தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரெயில் குண்டூர், விஜயவாடா வழியாக 12-ந்தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீகாகுளத்துக்கு சென்றடையும். அதன்படி நேற்று மட்டும் 2 ஆயிரத்து 345 வடமாநில தொழிலாளர்கள் சென்னையில் இருந்து ரெயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைக்குழந்தைகளுடன் பயணம்
முன்னதாக நேற்று மாலை 5 மணியில் இருந்தே நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் பஸ்கள் மூலம் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ரெயிலில் ஏறுவதற்கு முன்னர் மருத்துவ குழுக்கள் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, அதன் பிறகு பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சில பெண்கள் தங்களது கைக்குழந்தைகளை முதுகில் துணியால் பொதிந்த படி கட்டிக்கொண்டு பயணம் செய்தனர். ரெயில் பயணம் 3 நாள் வரை ஆகும் என்பதால், நிவாரண முகாம்களில் இருந்து அவர்கள் புறப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு நிவாரண பொருட்கள், நொறுக்கு தீனி வகைகளும் அடங்கிய பை சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story