ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா - தொழில்நுட்ப ஊழியர்கள் 2 பேருக்கும் தொற்று


ஏர் இந்தியா விமானிகள் 5 பேருக்கு கொரோனா - தொழில்நுட்ப ஊழியர்கள் 2 பேருக்கும் தொற்று
x
தினத்தந்தி 11 May 2020 4:35 AM IST (Updated: 11 May 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஏர் இந்தியா விமானிகள் 5 பேர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

கொரோனா தாண்டவமாடும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் முன் அந்த விமானங்களை இயக்கும் விமானிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதன்படி மும்பையில் ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 விமானிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவுக்கு சென்று வந்தவர்கள்

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விமானிகள் போயிங் 787 ரக விமானங்களை இயக்க வந்திருந்தனர். கடைசியாக அவர்கள் கடந்த மாதம் 20-ந் தேதிக்கு முன்னர் சீனாவுக்கு சரக்கு விமானத்தை இயக்கி இருந்தனர். அதன்பின்னர் கடந்த 3 வாரமாக அவர்கள் எந்த விமானத்தையும் இயக்கவில்லை என ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்தநிலையில், ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7-ந் தேதி செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

Next Story