ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி தவிக்கும் தையல் தொழிலாளர்கள் - சார்பு தொழில்களும் முடக்கம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தையல் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானமின்றி உள்ளனர். சார்பு தொழிலும் முடங்கியுள்ளதால் இதனை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். தையல் தொழிலாளர்களும் வேலை இழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தையல் தொழிற்சங்க நிர்வாகி ரவி மற்றும் விஜயகுமார் கூறியதாவது:-
தற்பொழுது திருமண சீசன் என்பதால் திருமணத்திற்கு தேவையான உடைகள் மற்றும் பட்டு புடவைகளுக்கு ஜாக்கெட்டுகள் தைப்பது, பள்ளிகள் திறக்க வேண்டிய நேரம் என்பதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான சீருடைகள் தைக்க வேண்டிய சீசன். ஆனால் தற்பொழுது ஊரடங்கு காரணமாக கடைகள் திறக்கப்படாததால் யாரும் புதிய துணிகள் எடுக்கமுடியவில்லை. இதனால் தைப்பதற்கு துணிகள் வருவதில்லை.
திருமணங்கள் நடைபெறாததால் புதிய துணிகள் தைக்க வேண்டிய வேலை இல்லாமல் தையல் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். துணிகள் தைப்பதன்மூலம் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தும் தங்கள் பிள்ளைகளை தற்போது பள்ளிகளில் படிக்க வைக்க கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். அரசு, தையல் தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.1,000 வழங்கியது. இந்த தொகை எங்கள் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. இந்த நிவாரணத் தொகையை மேலும் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும் எனக் கூறினார்.
மாவட்டத்திலுள்ள தையல் சார்ந்த தொழில்களான தையல் எந்திரம், நூல், ஊசி, பட்டன்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டதால் அதைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இவர்களுக்கும் அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பதே தையல் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story