கர்நாடகம் முழுவதும் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரபரப்பு
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கொரோனா வைரஸ் பரவியது.
நேற்று முன்தினம் வரை கர்நாடகத்தில் 763 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அத்துடன் 31 பேர் மரணமடைந்து இருந்தனர். அதுவும் கர்நாடகத்தில் தினமும் 10, 20 என்ற அளவில் தான் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கடந்த மாதம் (ஏப்ரல்) இறுதிவரை இருந்து வந்தது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கட்டிடப் பணிகள், விவசாய பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் 40 நாட்களுக்கு மேலாக வெறிச்சோடி கிடந்த சாலைகளில் வாகன பெருக்கமும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் புதியதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேலும் ஒரு பெண் பலி
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசுக்கு 763 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதில் பெங்களூருவில் 3 பேர், உத்தர கன்னடாவை சேர்ந்த 7 பேர், சிக்பள்ளாப்பூரை சேர்ந்த ஒருவர், கலபுரகியை சேர்ந்த 4 பேர், சிவமொக்காவை சேர்ந்த 8 பேர், பாகல்கோட்டையை சேர்ந்த 8 பேர், பெலகாவியை சேர்ந்த 22 பேர், தாவணகெரேயை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 817 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அதாவது பெங்களூரு நகரை சேர்ந்த 56 வயது பெண், மூச்சுத்திணறலுடன் கடந்த 4-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த 7-ந் தேதி உறுதியானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்துவிட்டார்.
422 பேர் குணம் அடைந்தனர்
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 816 ஆக உள்ளது.
இதுவரை 422 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 36 பேர் அடங்குவர். கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 311 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 68 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிவமொக்கா மாவட்டம்
கர்நாடகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் பசுமை மண்டத்தில் இருந்து வந்த சிவமொக்கா மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது அந்த மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு மூலம் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்கு மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது, ஒரு நாளைக்கு 20, 30, 40 என்ற அளவில் இருந்த வைரஸ் தொற்று ஒரே நாளில் 54 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தான் கர்நாடகத்தில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story