"பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொன்றோம்" - வாலிபர் கொலைவழக்கில் கைதான டிரைவர் வாக்குமூலம்
பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொன்றதாக, வாலிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
காட்பாடி,
காட்பாடி வஞ்சூரைச் சேர்ந்தவர் சுனில் (வயது 28). இவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட சிறுசிறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் விருதம்பட்டு பாலாற்றங்கரைக்கு அருகே சுனில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
விசாரணையில் அப்பகுதியில் வசித்த கோகிலா என்ற பெண்ணுக்கும், சுனிலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கோகிலாவும் அவரது தந்தையும் தலைமறைவாகி இருந்தனர். கோகிலாவின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் கடைசியாக ஆற்காடு பகுதியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான மணிகண்டன் (28) என்பவருடன் பேசியிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மணிகண்டனை நேற்று இரவு தேடிப்பிடித்த போலீசார் அவருடன் இருந்த மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவரான காங்கேயநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
மணிகண்டன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு:-
எனது சொந்த ஊர் மன்னார்குடி. எனது நண்பர் இப்ராகிம் மனைவிதான் கோகிலா. திருமணத்துக்குப் பிறகு விருதம்பட்டில் உள்ள மனைவியின் வீட்டிலேயே இப்ராகிம் தங்கிவிட்டார். ஒரு மகனும் ஒரு மகளும் அவர்களுக்கு உள்ளனர். நானும் வேலை தேடி மன்னார்குடியிலிருந்து வேலூர் வந்துவிட்டேன். வெளியில் தங்க வசதியில்லாத காரணத்தினால் இப்ராகிம் மாமியார் வீட்டிலேயே நானும் தங்கினேன்.
இந்தநிலையில், பலருடன் கோகிலா நெருக்கமாக பழகத் தொடங்கினார். அப்படித்தான் கொலை செய்யப்பட்ட சுனிலுடனும் கோகிலாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. மனைவியின் தவறான நடத்தையால் மன உளைச்சலுக்கு ஆளான இப்ராகிம், சுனிலை கண்டித்தார். அதனால்ஆத்திரமடைந்த சுனில், இப்ராகிமை அடித்து உதைத்தான். இதனால் மனைவியுடன் வாழப் பிடிக்காமல், இப்ராகிம் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போய் விட்டார்.
இப்ராகிம் சென்ற பிறகு நானும் கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியேறி ஆற்காடு பகுதியில் தங்கி ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தேன். கோகிலாவுடன் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. சுனிலிடமிருந்து கோகிலா கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினாள். ஆனாலும், சுனில் தினமும் மதுபோதையில் கோகிலாவின் வீட்டுக்கு வந்து தனிமையில் இருக்கலாம் என்று அழைத்தான். விருப்பத்துக்கு இடம் கொடுக்காத கோகிலாவை அடித்து உதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்கு முன்பு கோகிலாவை சரமாரியாக சுனில் தாக்கினான்.
இதுபற்றி என்னிடம் கூறி கோகிலா கதறி அழுதாள். இதையடுத்து, சுனிலை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டோம். கோகிலா மற்றும் அவளின் அப்பா முத்து, என்னுடைய நண்பனான சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர். நேற்று முன்தினம் கோகிலாவின் வீட்டுக்குள் நானும் சதீஷ்குமாரும் பதுங்கியிருந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே சுனில் மதுபோதையில் அங்கு வந்தான். அவனை வீட்டுக்குள் வைத்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தோம். நள்ளிரவு ஆனபிறகு உடலை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று வெளியில் வீசிவிட்டு தப்பிச் சென்றோம். கோகிலாவும் அவளின் அப்பாவும் எங்கு பதுங்கியுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியாது. இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மணிகண்டனையும், சதீஷ்குமாரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கோகிலாவையும் அவரின் தந்தையையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story