கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் 4,942 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் 4,942 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 33 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி உயிரிழந்தார். மற்ற 6 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவரும், எட்டயபுரத்தை அடுத்த இளம்புவனத்தைச் சேர்ந்த 23 வயதான வாலிபரும் அடங்குவர்.
இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளை தனிமைப்படுத்தி, அங்கு சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், அங்கு தடுப்புகள் அமைத்து போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் இணைந்து கண்காணித்து வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் கோவில்பட்டி ராஜீவ் நகர், இளம்புவனம் ஆகிய கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டார். அப்போது அவர், அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வியாபாரிகள், பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதை பார்த்தார். உடனே வங்கி மேலாளரிடம் விசாரித்த அவர், வங்கியின் உள்ளேயும், வெளியேயும் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு அமர்வதற்கு போதிய இருக்கைகள் அமைக்குமாறும், வங்கியின் நுழைவுவாயிலில் கை கழுவும் திரவம் வைக்குமாறும் அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
4,942 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள 778 வீடுகளில் 2,636 பேரும், எட்டயபுரம் இளம்புவனம் பகுதியில் உள்ள 630 வீடுகளில் 2,306 பேரும் என மொத்தம் 4,942 தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் எவரும் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடக் கூடாது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்க மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு ரேஷன் பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு நடமாடும் காய்கறி வாகனம் மூலம் காய்கறிகள் வழங்கப்படும். மேலும் அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிகள் நடைபெறாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு மூலம் கைகளை நன்கு கழுவ வேண்டும். சுய ஊரடங்கை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, தாசில்தார்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), அழகர் (எட்டயபுரம்), கோவில்பட்டி யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் கவிதா, முத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story