நெல்லை-தூத்துக்குடியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,299 பேர் சொந்த ஊர் பயணம் - சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்


நெல்லை-தூத்துக்குடியில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,299 பேர் சொந்த ஊர் பயணம் - சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 13 May 2020 4:45 AM IST (Updated: 12 May 2020 11:20 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் வடமாநில தொழிலாளர்கள் 1,299 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி, 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பினால் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

வடமாநில தொழிலாளர்கள்

அதன்படி, விருப்பம் உள்ள தொழிலாளர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பதிவு செய்து வந்தனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு அனல்மின்நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் 263 பேர் நெல்லையில் இருந்து ரெயில் மூலம் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அவர்களுக்கு நேற்று வ.உ.சி. துறைமுகம் பகுதியில் வைத்து உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் தலைமையில் கொரோனா தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவர்கள் 10 பஸ்கள் மூலம் நெல்லை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழியனுப்பி வைத்தார்.

போராட்டம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 3, 4-வது அணுஉலைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் தரப்பில், வடமாநில தொழிலாளர்களை சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு செல்ல 3 ஆயிரத்து 344 பேர் ஆன்லைனில் பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், கூடங்குளத்தில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 1,025 பேரை முதல் கட்டமாக நேற்று அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு ரெயில்

இதையடுத்து அவர்களுக்கு கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வைத்து மருத்துவக்குழுவினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் அதிகாரிகள், பயணத்தின்போது தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினர். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் 31 சிறப்பு பஸ்கள் மற்றும் ஒரு வேன் மூலம் கூடங்குளத்தில் இருந்து நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தூத்துக்குடி மற்றும் கூடங்குளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 1,288 பேரும், நெல்லையை சேர்ந்த 11 பேரும் என மொத்தம் 1,299 பேர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு பீகார் மாநிலம் பட்டியா ரெயில் நிலையத்துக்கு செல்லும் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த சிறப்பு ரெயிலில் மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. முன்னதாக அந்த சிறப்பு ரெயிலுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு

இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந் தது. தாழையூத்து, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ரெயிலில் தொழிலாளர்கள் சிலர் ஏற முயற்சி செய்யலாம் என்று தகவல் வெளியானது. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கூடங்குளத்தில் இருந்து 1,056 தொழிலாளர்களும், தூத்துக்குடியில் இருந்து 240 பேரும் நெல்லையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு ஜார்கண்ட் செல்லும் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Next Story