சிறப்பு ரெயிலில் டோக்கன் இல்லாமல் பீகார் செல்ல திரண்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி


சிறப்பு ரெயிலில் டோக்கன் இல்லாமல் பீகார் செல்ல திரண்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 13 May 2020 4:30 AM IST (Updated: 13 May 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பிச்சம்பாளையம்புதூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் 400 தொழிலாளர்கள் புறப்பட்டனர். டோக்கன் இல்லாதவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் .

அனுப்பர்பாளையம், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, அந்தந்த மாநில அரசுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன்படி திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த பீகார், ஒடிசா, மேற்குவங்காளம், ஜார்கண்ட் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்காக வருவாய்துறையினர் தொழிலாளர்களின் பெயர், விவரங்களை சேகரித்து, முறையாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி, போராட்டங்களில் ஈடுபடுவதும், தினமும் நூற்றுக்கணக்கானோர் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து பீகார் மாநிலத்திற்கு ரெயிலில் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட 400 தொழிலாளர்களை நேற்று காலை பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து காலை 6 மணி முதலே தொழிலாளர்கள் அங்கு குவிய தொடங்கினர். வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் தொழிலாளர்களின் டோக்கன்களை சரிபார்த்து பஸ்கள் மூலமாக ரெயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பீகார் மாநிலத்திற்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள் மட்டுமே வரவேண்டும் என்று கூறியிருந்த நிலையில் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு திரண்டனர். மேலும் அவர்கள் தங்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர். மேலும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Next Story