பாதுகாப்பு பணியில் இருந்த 5 ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா - மந்தைவெளி ரெயில் நிலையத்துக்கு ‘சீல்’
சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த மந்தைவெளி ரெயில் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் தங்குவதற்கு சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அங்கு 45 ஆயுதப்படை போலீசார் தங்கியிருந்து ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு தங்கியிருந்த 25 வயதான ஆயுதப்படை போலீசார் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
5 போலீசாருக்கு கொரோனா
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைத்து ஆயுதப்படை போலீசாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மாம்பலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசார் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் டாக்டர்கள் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மந்தைவெளி ரெயில் நிலையம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த ஆயுதப்படை போலீசார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story