விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 13 May 2020 3:59 AM IST (Updated: 13 May 2020 3:59 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம்,

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஆரம்பத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இடையிடையே அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்தது. கடந்த 2 நாட்களாக வெயில் அளவு 100 டிகிரியாக பதிவானது. மதிய வேளையில் அனல் காற்று வீசியதால் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்த பொதுமக்கள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் வாடி வதங்கினர்.

பலத்த மழை

இந்நிலையில் விழுப்புரம் நகரில் நேற்று காலை 9 மணியில் இருந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. 10 மணியளவில் திடீரென வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளித்தது. 10.25 மணியளவில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்தது. இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த இந்த மழையால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது.

இதேபோல் விழுப்புரத்தை சுற்றியுள்ள மயிலம், திண்டிவனம், பிடாகம், நன்னாடு, கோலியனூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று மாலை வரை வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது. கோடை வெப்பத்தை குளிர்வித்த இந்த மழையால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான நிலையில், நேற்று காலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் காலை 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ¼ மணி நேரம் நீடித்தது. இதேபோல் திருக்கோவிலூர், சங்கராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story