கே.வி.குப்பத்தில் லாரி டிரைவருக்கு கொரோனா; பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ‘சீல்’
கே.வி.குப்பத்தில் லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் வேலை செய்த பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
கே.வி.குப்பம்,
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கலை அடுத்த கீழ்முட்டுக்கூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய லாரி டிரைவர். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள வாழைப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த 9-ந் தேதி இரவு 10 மணிக்கு வாழைப்பழம் லோடு எடுத்துக்கொண்டு சென்னை பூந்தமல்லிக்கு சென்று திரும்பினார். அப்போது சரக்கு இறக்கிய நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அன்றே வீட்டுக்கு அவர் திரும்பினார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு அவருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது ஊரில் இருந்து நடந்தே வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, தனக்கு தொற்று இருப்பது குறித்து தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் தாசில்தார் சரவணமுத்து, மண்டல துணை தாசில்தார் சந்தோஷ், கிராம நிர்வாக அதிகாரி குமரன் மற்றும் சுகாதாரத் துறையினர் டிரைவரை அழைத்து ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரின் வீட்டின் முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்குமார், கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டினர். மேலும் அப்பகுதியில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து தாசில்தார் சரவணமுத்து, டிரைவர் வேலை பார்த்த பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சென்று அதை ‘சீல்’ வைத்தார். டிரைவரின் வீடு தனி வீடு என்பதால் அருகில் உள்ளவர்களுக்கு தொற்று பரவி இருக்க வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story