தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு


தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 13 May 2020 8:33 AM IST (Updated: 13 May 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தர்மபுரி நகரில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. தர்மபுரி நகர பகுதியில் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்க உதவி கலெக்டர் தேன்மொழி தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப் பட்டது. அப்போது தர்மபுரி நகராட்சியில் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி அரூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், பழைய தர்மபுரி மற்றும் பாப்பாரப்பட்டி சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை ராமாக்காள் ஏரி அருகே உள்ள மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம் சாலையில் இருந்து வரும் வாகனங்களை கிருபானந்த வாரியார் பள்ளி அருகில் உள்ள மைதானத்திலும், வெண்ணாம்பட்டி சாலையில் இருந்து வரும் வாகனங்களை மாந்தோப்பு ரெயில்வே ரோடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

நகர பஸ் நிலையம்

அதியமான்கோட்டை, தொப்பூர் சாலைகளில் இருந்து வரும் வாகனங்களை இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், அன்னசாகரம், முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, உங்கரானஅள்ளி, கொல்லஅள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை பழைய கோர்ட்டு வளாகத்தில் உள்ள மைதானத்திலும், நகர பகுதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் வாகனங்களை நகர பஸ் நிலைய பகுதியிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உரிய அடையாள அட்டைகளுடன் அத்தியாவசிய பணிகளுக்காக செல்பவர்களை மட்டும் சோதனைக்கு பின் போலீசார் அனுமதித்தனர். வெளியூர்களில் இருந்து தர்மபுரிக்கு தேவையின்றி வருபவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இருசக்கர வாகனங்களை அந்தந்த பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு சமூக இடைவெளியை பின்பற்றி நகர பகுதிக்குள் சென்று வருமாறு அறிவுறுத்தினார்கள். 

Next Story