என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு


என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 May 2020 9:49 PM GMT (Updated: 13 May 2020 9:49 PM GMT)

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.

நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்தி பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ந்தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன்(வயது 54), ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த சர்புதீன், கொல்லிருப்பை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம், நெய்வேலி 28-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த நிரந்தர தொழிலாளி பாவாடை ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். மற்ற 5 பேருக்கும் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளியான விருத்தாசலம் தாலுகா முதனை கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் பாலமுருகன் (36) நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 4 பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., தொ.மு.ச. மற்றும் பாட்டாளி தொழிற்சங்கம், பா.ம.க., தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் என்.எல்.சி. நிறுவன அதிகாரிகள் மற்றும் நிறுவன தலைவர், இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட சுமூகமான முடிவின்படி விபத்தில் சிக்கி இறந்த பாலமுருகன் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், ரூ. 25 லட்சம் இழப்பீட்டு தொகையும் பெறுவதற்கான கடிதத்தை 2-ம் அனல் மின் நிலைய அலுவலகத்தில் நேற்று காலை என்.எல்.சி. மனிதவளத்துறை முதன்மை பொது மேலாளர் தியாகராஜூ பாலமுருகனின் உறவினரிடம் வழங்கினார்.

Next Story