வங்கி கடனை மக்கள் திருப்பி செலுத்தவேண்டும் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்


வங்கி கடனை மக்கள் திருப்பி செலுத்தவேண்டும் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 May 2020 5:05 AM IST (Updated: 14 May 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் வாங்கிய கடன்களை பொதுமக்கள் திருப்பி செலுத்தவேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகூர்,

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசு வழங்கிய நிதி உதவி, நிவாரண தொகைகளை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் கிராமப்புற மக்கள் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் புதுவை பாரதியார் கிராம வங்கி, இந்தியன் வங்கி மற்றும் நபார்டு வங்கி வழிகாட்டுதலின்படி மக்களை தேடிச்சென்று பண பரிவர்த்தனை வழங்கும் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த சேவையை, ஏம்பலம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பனித்திட்டு கிராமத்துக்கு நடமாடும் ஏ.டி.எம். வாகனம் கொண்டு வரப்பட்டது. இதனை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார். இதன்பின், பனித்திட்டு, நரம்பை மீனவ கிராமங்களில் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கடனை திருப்பி செலுத்தவேண்டும்

அப்போது மாவட்ட தொழிற்பயிற்சி மையம், கதர் கிராம வாரியம், புதுவை பாரதியார் கிராம வங்கி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக மீனவர்கள், சுய உதவி குழுக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதன் அதிகாரிகள் விளக்கினர். அமைச்சர் கந்தசாமி பேசுகையில், வங்கிகளில் கடன் பெறுவோர் கடனை திருப்பி செலுத்தினால், மீண்டும் வங்கி அதிகாரிகள் கடன் தருவார்கள். ஆனால், சிலர் கடன் வாங்கும் போதே தள்ளுபடி என்ற நினைப்புடன் செல்கிறார்கள். அது தவறான செயலாகும் என்றார்.

கூட்டத்தில், மீன் வளத்துறை இணை இயக்குனர் தெய்வசிகாமணி, உதவி இயக்குனர் தனசேகர், பாரதியார் கிராம வங்கி தலைவர் மார்கரேட் லெடிஷா, நடமாடும் ஏ.டி.எம். பிரிவு பொறுப்பாளர் கிருத்திகா, தொழில்நுட்ப பிரிவு மேலாளர் பிரபு, மாவட்ட தொழில் பயிற்சி மைய இயக்க மேலாளர் குமார், கதர் கிராம வாரிய துணை செயல் அதிகாரி கணேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அதிகாரி மலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story