கொரோனா தடுப்பு நடவடிக்கை: வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை


கொரோனா தடுப்பு நடவடிக்கை: வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
x
தினத்தந்தி 14 May 2020 4:00 AM IST (Updated: 14 May 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பொள்ளாச்சி,

கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு பொள்ளாச்சி நகரம் நீண்ட நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. வழக்கமாக வங்கிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்க வைப்பார்கள். மேலும் சிலர் மட்டும் வங்கிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் தளர்வுகளுக்கு பிறகு பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் கிருமி நாசினி (சானிடைசர்) தெளித்து கைகளை சுத்தப்படுத்திய பிறகே வங்கிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றது. இதையொட்டி வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல் வெப்ப நிலை கண்டறியப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்களை வங்கிகளுக்குள் அனுமதிப்பதில்லை.

மேலும் கிருமி நாசினி (சானிடைசர்) கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே வங்கிகளுக்குள் அனுமதிக்கிறோம். வங்கிகளுக்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்க 2 பேர் வீதம் உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றனர். வங்கிகளுக்கு வெளியே வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க வைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

வங்கிகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு முறைகள் ஏ.டி.எம். மையங்களில் பின்பற்றப்படுவதில்லை. இதனால் ஏ.டி.எம். மையங்கள் மூலம் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. பொள்ளாச்சி நகரில் சில ஏ.டி.எம். மையங்களில் மட்டும் தான் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் காவலர்கள் இல்லாத நிலையே உள்ளது. இதனால் ஏ.டி.எம். மையங்களுக்குள் கூட்டமாக நின்று பணம் எடுக்கின்றனர்.

எனவே ஏ.டி.எம். மையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும். பணம் எடுக்க, செலுத்த வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினியை காவலர்கள் மூலம் கொடுத்து சுத்தப்படுத்த செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொருவராக ஏ.டி.எம். மையங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story