ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி பூ வியாபாரி கைது


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி பூ வியாபாரி கைது
x
தினத்தந்தி 14 May 2020 10:12 AM IST (Updated: 14 May 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே கடன் பிரச்சினையை தீர்க்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பூ வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்ரய்யா. இவருடைய மகன் ராஜேஷ்குமார் (வயது27). பூ வியாபாரி. ஊரடங்கால் பூ வியாபாரம் பாதிக்கப்பட்டதால் இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதில் லட்சக்கணக்கில் அவர் பணத்தை இழந்து நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடனாளியான அவர் தொடர்ந்து மனவேதனையில் இருந்து வந்துள்ளார். கடன் பிரச்சினையால் குடும்பத்தினருடன் அவருக்கு தினமும் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடன் பிரச்சினையை தீர்க்க முடிவெடுத்த ராஜேஷ்குமார் நேற்று இரவு 12 மணி அளவில் அந்தேவனப்பள்ளி கிராமத்திலுள்ள தனியார் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்டு கிராமமக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு ஒரு நபர் எந்திரத்தை உடைத்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ராஜேஷ் குமாரை ஏ.டி.எம். மையத்திலேயே வைத்து பூட்டி சிறை பிடித்தனர்.

பூ வியாபாரி கைது

இந்த சம்பவம் குறித்து கிராமமக்கள் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதாவுக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற பூ வியாபாரி ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அதிக அளவில் கடன் வாங்கினேன். பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதால் கடன் பிரச்சினையை தீர்க்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பூ வியாபாரி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story