கடலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்க ஆயத்த பணிகள் தீவிரம்


கடலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்க ஆயத்த பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 14 May 2020 10:27 PM GMT (Updated: 14 May 2020 10:27 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்தை தொடங்க ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர்,

கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் வருகிற 18-ந்தேதி முதல் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களை இயக்க ஆயத்த பணிகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

கிருமி நாசினி தெளிப்பு

அதாவது பஸ்களில் கிருமி நாசினி தெளித்தல், ஒரு பஸ்சில் 26 பேர் மட்டுமே செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இது பற்றி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வருகிற 18-ந்தேதி அரசு பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டால், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடலூர் பணிமனையில் இருந்து பஸ் புறப்படும் போது, கிருமி நாசினி தெளிக்கப்படும். அதேபோல் பஸ் நிலையத்தில் சமூக இடைவெளி விட்டு பயணிகள் ஏறுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம்.

முக கவசம்

அவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு செய்வார்கள். அதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலுக்கு பஸ்கள் சென்று பயணிகளை இறக்கி விட்டதும், நகராட்சி, பேரூராட்சி சார்பில் மீண்டும் பஸ்சில் கிருமி நாசினி தெளித்து, பயணிகளை ஏற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்குவோம். 26 பேர் மட்டும் செல்லும் வகையில் வரிசை எண்களை பஸ்சில் ஒட்டி வருகிறோம்.

மேலும் பஸ்களில் உள்ள சிறு, சிறு பழுதுகளையும் சரிசெய்து வருகிறோம் என்றார்.

Next Story